லேபிள்கள்

22.5.16

மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர்

ராமநாதபுரத்தில் `எலைட்’ திட்டத் தின் கீழ் பயிற்சி பெற்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர் மருத்துவப்
படிப்புக்கான கட்-ஆப் பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 5,444 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,068 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 

அரசு பள்ளி மாணவர் தேர்ச்சியில் மாவட்டம் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதி வசதியுடன் கல்வி கற்றுத்தரும் `எலைட்’ திட்டத்தை முன்னாள் ஆட்சியர் க.நந்தகுமார் கொண்டு வந்தார்.இங்கு படிப்போரை மருத்துவம், பொறியியல் படிக்க வைக்க முயற்சி எடுத்தார். இந்தாண்டு `எலைட்’ பிரிவில் 27 மாணவிகள், 18 மாணவர்கள் என 45 பேர் படித்தனர். இவர்களில் 10 பேர் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் பெற்றனர். 

பலருக்கு சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம்கிடைக்கும் என எலைட் ஒருங்கிணைப்பாளரும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியருமான நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.இந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் படித்த வாலாந்தரவையைச் சேர்ந்த ஆர்.மனோஜ்குமார் 1175 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். இவர் தமிழில்-192, ஆங்கிலம்-184, இயற்பியல்-199, வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றில் தலா 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றார். இவரது தந்தை ரெங்கசாமி ஹோட்டல் தொழிலாளி. இவரது தாய் அமராவதி கூலி வேலை செய்கிறார். மாணவர் மனோஜ்குமார் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்தார்.மாணவி எஸ்.நஸ்ரின் 1161 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்-192, ஆங்கிலம்-185, இயற்பியல்-188, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-196 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மாணவி டி.இலக்கிய எழிலரசி 1158 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்-185, ஆங்கிலம்-179, இயற்பியல்-194, வேதியியல், உயிரியல், கணிதம் தலா 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றார்.எலைட் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியர் ச.நடராஜன் பாராட்டினார். அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ஜேசுரத்தினம், பெற்றோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக