பள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கு: அரசு பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூன் 15 ஆம் தேதிக்குள் அரசின் கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில் சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அரசாணைகள்: தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை 2-ஆம் தேதி தமிழக கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது. இதில், சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச் சான்றிதழ்களில் குறிப்பிட விரும்பவில்லை எனில், அதை கல்வி நிறுவனங்கள், பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் இந்த அரசாணை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை வலியுறுத்தி, 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மேலும் ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது. இதுவும் பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவில்லை.
இதனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில் (டி.சி.யில்) கண்டிப்பாக சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.
வற்புறுத்தக் கூடாது: சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர். பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர, பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்த கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரினார்.
அரசு பதிலளிக்க உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சத்திய சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக