லேபிள்கள்

22.5.16

மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைத்தால் கடும் நடவடிக்கை !!!

எந்த காரணத்தை கொண்டும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்கக் கூடாது' என, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும்
மாணவர்கள், பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்ததும், உரிய காலத்தில் அவர்களது சான்றிதழ்களை, கல்லுாரி மற்றும் பல்கலைகள் வழங்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கல்லுாரி மற்றும் பல்கலைகள், மாணவர்களின் பட்டங்களை நிறுத்தி வைப்பதும், வழங்காமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
கட்டண பாக்கி, அபராத பாக்கி, தேர்வு முடிவை நிறுத்திவைத்தல், கல்லுாரியின் நிர்வாக புகார், பேராசிரியர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் போன்ற பல காரணங்களால் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இதனால் அந்த மாணவர்கள், தங்களுக்கான பட்டம் உரிய காலத்தில் கிடைக்காமல், வேலைவாய்ப்பு மற்றும் மேல் படிப்புக்கு வழியின்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லுாரிகளும் பணமே குறியாக, மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நடந்து கொள்கின்றன. இதுபோன்று பல பல்கலைக்கழகங்கள் மீது, யு.ஜி.சி.,க்கு புகார்கள் சென்றுள்ளன. அவற்றை விசாரித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
கடும் நடவடிக்கை நிச்சயம்
அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஒரு மாணவரின் பட்ட சான்றிதழை, மிக அரிதான நடைமுறைகளுக்காக மட்டுமே, 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும். ஆனாலும் அதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், பல பல்கலைகள் சான்றிதழை நிறுத்தி வைப்பது தெரிய வந்துள்ளது.இந்நிலை நீடித்தால் அந்த பல்கலைகள் மீது யு.ஜி.சி.,யின் குறைதீர் ஒழுங்குமுறை சட்டம் - 2012, விதிமுறை, 9ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் எந்த காரணமாக இருந்தாலும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்காமல் உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக