லேபிள்கள்

22.5.16

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் அஜீஸ் தேசிய அளவில் 3-ம் இடம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை மாணவர்
அஜீஸ் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்தார்.மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 22-ம் தேதி நிறைவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 54,756 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். தமிழகத்தில் மட்டும் 13,625 பேர் தேர்வெழுதினர்.இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்குவெளியிடப்பட்டன. டெல்லி அசோக் விஹார் மான்ட்போர்டு பள்ளி மாணவி சுக்ரிதி குப்தா, 500-க்கு 497 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஹரியானா தாகூர் பொதுப்பள்ளி மாணவி பாலக் கோயல் 496 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார். ஹரியானா செயின்ட் தெரசா கான்வென்ட் பள்ளி மாணவி சாம்யா உப்பல், சென்னை கே.கே.நகர் பிஎஸ்பிபி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் அஜீஸ் ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.சென்னை மண்டலத்தில் 91.14 சதவீதம் பேரும் தமிழகத்தில் 97.32 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருப்பதாக சிபிஎஸ்இ மண்டல அதிகாரி சீனிவாசன் தெரிவித்தார்.495 மதிப்பெண்களுடன் (கணிதம் - 100, இயற்பியல் - 99, வேதியியல் - 99, ஆங்கிலம் - 98, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 99) தேசிய அளவில் 3-ம் இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ள சென்னை மாணவர் அஜீஸ், நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர். அவரது தந்தை சேகர் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி. தாயார் சாந்தி ஆசிரியை.தனது சாதனை குறித்து நிருபர்களிடம் அஜீஸ் கூறும்போது, ‘‘தேசிய அளவில் 3-வது இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், வகுப்பு ஆசிரியர்களால்தான் என்னால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது. எனக்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கவும். ஐஐடி-யில் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆக விரும்புகிறேன்’’ என்றார்.

சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் பரத் வெங்கடேஸ்வரனும் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆனால், ரேங்க் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்: ஆங்கிலம் - 97. கணிதம் - 100, இயற்பியல் - 100, வேதியியல் - 99, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 99.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் பரத் வெங்கடேஸ்வரனுக்கு பள்ளியின் முதல்வர் கே.மோகனா மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக