லேபிள்கள்

22.5.16

எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து யாருக்கு?

உச்ச நீதிமன்றம் அறிவித்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ள நிலையில், யாருக்கு தேர்வு ரத்து என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசால், ஏ.ஐ.பி.எம்.டி., என்ற பெயரில், 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்கள் இதில் பெறும்,'கட் ஆப்' மதிப்பெண்ணும், பிளஸ் 2, 'கட் ஆப்' மதிப்பெண்ணும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயாராகும். இதில் முன்னிலை பெறுவோருக்கு, மத்தியமருத்துவக் கல்லுாரிகள், மாநில அரசின் மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.மாநில அரசின் மீதமுள்ள, 85 சதவீத இடங்களுக்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், நுழைவுத் தேர்வு இன்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாணவர் சேர்க்கை நடந்தது.இந்நிலையில், 'அனைத்து மாநிலங்களிலும், இந்த ஆண்டே நுழைவுத் தேர்வு நடத்தியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே, 1ல் நடந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்காதோருக்கு, ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.இரண்டு மாதங்களில் தேர்வுக்கு எப்படி தயாராவது என, குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களின் கூட்டம், மூன்று தினங்களுக்கு முன், டில்லியில் நடந்தது; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.எனவே, நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு மட்டும் தள்ளி வைக்க, அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்தது. இந்த தீர்மானம், ஜனாதிபதியின் சிறப்புஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, தமிழகம் உட்பட நுழைவுத் தேர்வில் பங்கேற்காதமாநில அரசுகளின் கல்லுாரிகளில் உள்ள, 85 சதவீத இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் படி, மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். தனியார் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் சேர, இந்த ஆண்டே நுழைவுத் தேர்வு எழுதும் நிலை உள்ளது.இதுகுறித்து, மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும், 'ஆகாஷ் இன்ஸ்டிடியூட்' நிறுவன, சென்னை மைய உதவி இயக்குனர் ஜான் ஜீன் தாமஸ் கூறியதாவது:மாநிலங்களின், 85 சதவீத இடங்களுக்கு மட்டுமே நுழைவுத் தேர்வு இன்றி, சேர்க்கை நடத்த முடியும். மாநில அரசு கல்லுாரிகள் இல்லாமல், மத்திய அரசின் கல்லுாரிகளிலோ, தனியார் கல்லுாரி மற்றும் பல்கலைகளிலோசேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். பெற்றோர் குழப்பமின்றி, மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

'நிரந்தர விலக்கு?'''

மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது; தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு எந்த சிக்கலும் இன்றி மருத்துவப் படிப்பில் சேர முடியும். அடுத்த ஆண்டு மீண்டும் சிக்கல் வராமல், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சட்டம் குறித்து மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி, மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் இருந்த, நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.- கே.செந்தில்,தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம்

'தனியார் கல்லுாரிகளில்...?'''

மாநில அரசின், 85 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் இந்த அவசர சட்டத்தின் மூலம், நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்படும் என, தெரிகிறது. சட்ட முன்வடிவு இன்னும் வெளியாகவில்லை. அதே நேரம், அரசு ஒதுக்கீடு இல்லாத தனியார் கல்லுாரி, பல்கலை இடங்களுக்கு நுழைவுத் தேர்வு ரத்தாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

- ஜெயப்பிரகாஷ் காந்தி,கல்வி ஆலோசகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக