கால மேலாண்மை
பத்தாம் வகுப்பிற்கு எழுதுவதற்குக் கால அளவு 2.30மணி வரை என்பது யாருக்கும் தெரியும். இந்த இரண்டைரை மணி நேரத்தில், சிலர் சீக்கிரமாக முடித்துவிட்டு என்னசெய்வது என்று முழிப்பார்கள்.
பரிட்சை முடித்துவிட்டுப் பின்பு பார்த்தால், எதையாவது எழுதாமல் வந்துவிட்டதை நினைத்து வருந்துவார்கள். இது ஒரு ரகம். இன்னொரு ரகம் ஒன்று இருக்கிறது. காலம் இருக்கிறது என்று மெதுவாக எழுதுவார்கள். காலம் முடிந்தபின் பார்த்தால் சில வினாக்கள் எழுத அவகாசம் இல்லாமல்போய் வருத்தமடைவார்கள். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதியதைச் சரிபார்த்து சந்தோஷமடையும் ரகமே சிறந்த ரகம். எப்படி இந்த ரக மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்?
2.30 மணிநேரம் இருக்கிறது என்று முழுவதும் பயன்படுத்தாமல், 2.15 மணித்துளிகளில் திட்டமிட்டு எழுதி முடித்துவிடவேண்டும். எப்படி? ஒவ்வொரு அலகிற்கும், வினாவிற்குமான எழுதும் நேரத்தைத் திட்டமிடவேண்டும். வீட்டில், முன்கூட்டியே முழு வினாத்தாளையும் தேர்வாகப் பாவித்து விடை எழுதி பார்த்தால் இந்தப் பிரச்னை வராது.வினாவின் தன்மையை வைத்து அதற்கான கால அளவைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், எழுதியதை வாசிக்க, சரிசெய்ய காலத்தை ஒதுக்கவேண்டும். அதைத்தான் இப்பொழுது தமிழ்த்தாளுக்காகப் பார்க்கப்போகிறோம்.
தமிழ் முதல் தாள்
1. உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல் 2 நிமிஷம்
2. கோடிட்ட இடம் 2 நிமிஷம்
3. பொருத்துக 2 நிமிஷம்
4. வினா அமைத்தல் 4 நிமிஷம்
5. குறுவினா செய்யுள் (21-27) (5 மட்டும்) 15 நிமிஷம்
6. குறுவினா உரைநடை(28-34) (5 மட்டும்) 15 நிமிஷம்
7. சிறுவினா செய்யுள் (35-39) (3 மட்டும்) 15 நிமிஷம்
8. சிறுவினா உரைநடை (40-44) (3 மட்டும்) 15 நிமிஷம்
9. பாடல் வினா விடை 5 நிமிஷம்
10. உரைநடை வினாவிடை 5 நிமிஷம்
11. நெடுவினா (47, 48) 40 நிமிஷம்
12. மனப்பாடம் (49) 15 நிமிஷம்
13. விடைத்தாளைச் சரிபார்த்தல், திருத்துதல் 15 நிமிஷம்
தமிழ் இரண்டாம் தாள்
1. உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல் 2 நிமிஷம்
2. கோடிட்ட இடம் 2 நிமிஷம்
3. சுருக்கமான விடையளி 8 நிமிஷம்
4. குறுவினா (21-27) (5 மட்டும்) 15 நிமிஷம்
5. 5 மதிப்பெண் அணி, அலகிடுதல் (28-30) (2 மட்டும்) 10 நிமிஷம்
6. துணைப்பாடக்கட்டுரை (31-33) (2 மட்டும்) 20 நிமிஷம்
7. மொழியாக்கம் (34-35) (4 மட்டும்) 15 நிமிஷம்
8. கதை அல்லது கவிதை (36) 5 நிமிஷம்
9. பாடல் நயம் 10 நிமிஷம்
10. வங்கிப் படிவம் (38) 3 நிமிஷம்
11. சூழல் வினா- விடை (39) 5 நிமிஷம்
12. கடிதம் எழுதுதல் (40) 10 நிமிஷம்
13. கட்டுரை (41) 30 நிமிஷம்
14. விடைத்தாளைச் சரிபார்த்தல், திருத்துதல் 15 நிமிஷம்
தேர்வு அறையில்...
1. தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் படப்படப்புடன் வாங்கத் தேவையில்லை. வினாத்தாள் கைக்கு வருவதற்கு முன்பாக, “எனக்கு அளிக்கப்படும் வினாத்தாளில் உள்ள வினாக்கள் எனக்குத் தெரிந்தவை. நான் படித்தவை. அதனால் வினாத்தாள் எளிமையாகவே இருக்கும்“ என்று கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் உறுதியும் தன்னம்பிக்கையும் கொள்ளவேண்டும்.
2. வினாத்தாளைப் படப்படவெனப் புரட்டாமல், உங்களுக்குத் தெரிந்த வினாக்களைக் கண்ணில் பதியும்படி பார்க்கவும். மன ரீதியாக இந்தச் செயல் சந்தோஷம் தரும்.
3. வினாத்தாளில் நீங்கள் எழுதப்போகும் வினாக்களை மனதில் டிக் செய்யுங்கள். பிறகு, அவற்றிற்கான விடைகளை மனதில் வேகமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பாருங்கள்.
4. முதலில் தெரிந்த வினாக்களை எழுதிவிடுங்கள். அவை தன்னம்பிக்கையைத் தந்துவிடும். பிறகு பாருங்கள்... குழப்பான விடைகள் தெளிவாக வந்து அமைந்துவிடும்.
5. அடித்தல், திருத்தல் இல்லாமல், தெளிவாக எழுத முயற்சியுங்கள். உங்கள்மனம் தெளிவாக இருந்தால், விடைகள் தெளிவாக அமைந்துவிடும்.
6. வினா எண்ணைச் சரியாக எழுதிருக்கிறீர்களா என்று உறுதி செய்யுங்கள்.
7. விடைகளை எழுதி முடித்தபின், கடைசியாக அமைந்துள்ள காலத்தில்வாசித்துப் பார்த்துத் திருத்துங்கள்.
8. வினாத்தாளில் எந்தக் குறியும் இடாதீர்கள்.
9. விடைத்தாளில் பக்க எண், வினா எண், அலகு எண் ஆகியவற்றைச் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.
10. உங்களுக்குச் சின்னஞ்சிறு இடர்ப்பாடு நிகழ்ந்தாலும் தேர்வு அறைக் கண்காணிப்பாளர் உதவியை நாடுங்கள்.
11. அக்கம்பக்கம் பார்க்காதீர்கள். உங்கள் கவனம் சிதறி, விடை சரியாக அமையாமல்போய்விடும்.
12. யாருடைய அழைப்பையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். சைகை உட்பட.
13. தாளில் வியர்வை படாதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
14. எழுதி முடித்தபின், உடனடியாகச் சரிபார்ப்பதை விட்டுவிட்டு. ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டுப் பின்பு சரிபாருங்கள்.
15. “தேர்வு முடிந்துவிட்டது. விடைத்தாளையும் சரி பார்த்துவிட்டேன். எல்லாம் நன்றாக அமைந்துவிட்டது.“ என்று மனதிற்குள் சொல்லியபடி தேர்வு காலம் முடிந்தபின் மனமகிழ்ச்சியுடன் புறப்படுங்கள்.
வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக