குழந்தைக்காக அழகான உடைகள் வாங்கியாகிவிட்டது. புதிய பேக் தேடிப்பிடித்தாகிவிட்டது. நாலைந்து கடைகள் ஏறி இறங்கி நல்ல டிபன் பாக்ஸ் வாங்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஓ.கே.தான்! ஆனால் குழந்தையை முதல் நாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, போகவே மாட்டேன் என்று அழுது அடம் பிடித்தால் என்ன செய்வது?– இந்த கேள்விதான், முதன் முதலாக குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாராகும் எல்லா அம்மாக்களிடமும் எழுகிறது.
சில தாய்மார்களுக்கு ‘வகுப்பறை குழந்தைக்கு பிடிக்குமா?, புதிய நண்பர்களோடு அனுசரித்து செல்வானா? அல்லது சண்டை போடுவானா?, அங்கே ஒழுங்காக சாப்பிடுவானா? மாட்டானா?’ என்றெல்லாம் ஏகப்பட்ட கவலைகள்!
பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்கு சென்று, உற்சாகமாக படிக்கவேண்டும் என்றால் இப்போதே அவர்களை நீங்கள் பக்குவப்படுத்தவேண்டும். அதற்கு அடுத்த இரண்டு மாதங்களை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், பள்ளிகள் திறந்ததும் உங்கள் குழந்தைகள் புன்னகை முகமாய் பள்ளிக்கு செல்லும்..” என்று கூறும் கல்வியாளர் வி.மகேஸ்வரி, பள்ளிக்கு செல்ல குழந்தைகளை பக்குவப்படுத்துவது பற்றி விளக்குகிறார்:
முதலில் குழந்தைகளை மனோரீதியாக தயார் செய்ய வேண்டும். அதற்காக பள்ளியை பற்றிய பாசிட்டிவ்வான வார்த்தைகளை குழந்தைகள் காதில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். ‘பள்ளிக்கு செல்வது உனக்கு ஜாலியான அனுபவமாக இருக்கும். நண்பர்கள் அங்கே கிடைப்பார்கள். அவர்களோடு ஆடலாம், பாடலாம், விளையாடலாம். பள்ளிக்கு சென்ற பின்பு நீ வேகவேகமாய் வளருவாய். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு சென்றுகொண்டே இருப்பாய். உனது பள்ளியில் ஏராளமான சாதனையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். நீயும் அவர்களைப்போல் ஆவாய்..’ என்றெல்லாம் கூறி உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
இப்போது பள்ளியை பற்றிய நெகட்டிவ்வான விஷயங்கள் எதையும் குழந்தைகளிடம் சொல்லக்கூடாது. ‘நீ தொந்தரவு செய்தால் இப்போதே பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். ஆசிரியரிடம் கூறி உன்னை அடிக்கச்சொல்வேன்’ என்பது போன்று உங்கள் குழந்தைகளிடம் சொன்னால், ‘பள்ளி ஒரு ஜெயில் போலவும், ஆசிரியைகள் யார் கிடைப்பார்கள் அடிக்கலாம் என்று காத்திருப்பது போலவும்’ அவைகளின் மனதில் பதிந்துவிடும். பள்ளியை நினைத்தாலே அவர்களுக்கு பயம் உருவாகி, பள்ளி திறந்த பின்பு, செல்வதற்கு தயங்குவார்கள். அழவும் செய்வார்கள்.
எந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்திருக் கிறீர்களோ அந்த பள்ளிக்கு இப்போதே அவைகளை அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள கட்டிடங்கள், சுவர் ஓவியங்கள், வகுப்புகளை காட்டுங்கள். பள்ளி வாகனங்கள், மைதானம், கண்களின் தென்படும் ஆசிரியைகளை எல்லாம் காட்டிக்கொடுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் பள்ளியை பற்றியும், தங்கள் ஆசிரியைகள் பற்றியும் ஒரு கற்பனை இருக்கும். அந்த கற்பனை சிறகுகள் விரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள். பள்ளி திறக்கும் முதல் நாளில் அவசரமாக குழந்தையை அழைத்துவந்து, பள்ளியைக்காட்டி உள்ளே போ என்று சொல்லும்போது குழந்தைக்கு அது திடீர் திணிப்புபோல் தோன்றும். அதனால் குழந்தைகள் மிரளக்கூடும். பள்ளி திறக்கும் முன்பே நாலைந்து முறை அழைத்துச் சென்றுவிட்டால் பள்ளிக்கும்– குழந்தைக்குமான மனோரீதியான நெருக்கம் முதலிலே உருவாகி, தயக்கம் நீங்கிவிடும்.
இன்றைய குழந்தைகள், தங்களைப் போன்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் காட்சிகளை நாளிதழ், டெலிவிஷன் போன்றவைகளில் கூர்ந்து கவனிக்கின்றன. அந்த குழந்தைகளின் உடை, பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் போன்ற அனைத்தையும் பார்க்கிறார்கள். அப்போதே தங்களுக்கு என்னென்ன கலரில், என்னென்ன வடிவத்தில், எப்படிப்பட்ட பொருட்கள் வேண்டும் என்று மனதளவில் தேர்வு செய்துவிடுகின்றன. அது போன்றவைகளை கடைகளில் தேடிப்பிடிக்க விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளின் இத்தகைய ஆசையை புரிந்துகொள்ளாமல் தாங்களே தேர்ந்தெடுத்து வாங்கி வந்து குழந்தைகளிடம் நீட்டுவார்கள். அது குழந்தைகளுக்கு எரிச்சலை தோற்றுவிக்கும். உங்கள் குழந்தையின் பள்ளி வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கும் உரிமையை உங்கள் குழந்தைக்கு மனப்பூர்வமாக வழங்குங்கள்.
எல்லா குழந்தைகளும் அம்மாக்களோடு நெருக்கமாக இருக்கும். சிறிது நேரம் அம்மாவை பிரிவதே அவைகளுக்கு கஷ்டமான அனுபவம். அதனால்தான் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லத் தொடங்கும், துவக்க நாட்களில் அம்மாவின் பிரிவை நினைத்து அழுகின்றன. இந்த நெருக்கடியை தீர்க்க தாய், குழந்தைகளிடம் இருந்து சற்று பிரிய முன்வரவேண்டும். இப்போதே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், பொறுப்பானவர்களின் பாதுகாப்பில் குழந்தையை விட்டு, அதற்கு பிரிவை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்யவேண்டும். பிரிவால் பாசம் குறையாது அதிகரிக்கத்தான் செய்யும் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்பே, குழந்தைகளை பள்ளி நேரத்திற்கு பழக்கப்படுத்தவேண்டும். வீட்டில் இஷ்டத்திற்கு தூங்கி, விழிக்கும் குழந்தைகளை பள்ளி திறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து, பள்ளி நேரத்திற்கு தக்கபடி எழுப்பிவிடவேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் மிகுந்த வேலைப்பளுவுக்கு உள்ளாகிறார்கள். அந்த நிலையை போக்க, துவக்கத்தில் இருந்தே பள்ளிக்கு சுயமாக கிளம்புவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் வாங்கிய உடனே ஆசிரியைகளை சந்தித்து, குழந்தைகளுக்கான வகுப்பு எப்படி நடக்கும் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு தக்கபடி குழந்தைகளை பக்குவப்படுத்துங்கள். அங்கு நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். அவைகளை பயன்படுத்தி விளையாடலாம். ஆனால் அது உங்கள் குழந்தைக்கு மட்டும் உரிமையானதல்ல என்பதை விளக்கவேண்டும். ‘அனைத்து பொருட்களும், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானவை. இன்னொரு குழந்தை ஒரு பொருளைவைத்து விளையாடும்போது உனக்கு அது தேவைப்பட்டால் தட்டிப் பறிக்கக்கூடாது. கேட்டு வாங்கவேண்டும். தராவிட்டாலும் பொறுமைகாக்க வேண்டும்’ என்று, பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே உங்கள் குழந்தைகளிடம் பொறுமையையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் உருவாக் குங்கள்.
எவ்வளவுதான் குழந்தைகளை பக்குவப்படுத்தினாலும் முதல் நாள் பள்ளிக்கு செல்ல பல குழந்தைகள் அழவே செய்யும். முதல் நாள் அழுதால் காலம் முழுக்க குழந்தை அழும் என்று தப்புக் கணக்கு போடவேண்டாம். அழுதால் அழட்டும். அதுவாக சரியாகிவிடும். அதை மீறி குழந்தை அழுவதை ஒரு பெரிய விஷயமாக விவாதிக்கவோ, மறுநாள் அழுதால் தண்டனை தருவேன் என்று மிரட்டவோ வேண்டாம். அழுதாலும் பள்ளி மீதான ஆர்வம் குழந்தைகளுக்கு குறையாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.
பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத சில குழந்தைகள் தந்திரமாக, பள்ளிச்சூழல் சரியில்லை, ஆசிரியை சரியில்லை, அருகில் இருக்கும் சக குழந்தைகள் சரியில்லை என்று சொல்லும். அப்படிப்பட்ட விஷயங்களை கேட்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டக்கூடாது. அதே நேரத்தில் பள்ளியையோ, ஆசிரியையோ, சக நண்பர்களையோ பாராட்டி பேசும்போது காதுகொடுத்து கேட்டு, அதுபோன்ற செய்திகளை தினமும் சொல்ல உற்சாகப்படுத்துங்கள்.
பிறந்த நாளில் இருந்து ஏழு வயது வரையிலான காலகட்டம் குழந்தைகளின் வளர்ச்சியில் மிக இன்றியமையாதது. அந்த காலகட்டத்தில்தான் அவர்கள் மூளை வேகமாக வளர்கிறது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களை சுற்றி நடப்பதை எல்லாம் மனதில் அப்படியே பதிய வைக்கிறார்கள். அந்த காலகட்டத்தில்தான் அவர்களது பள்ளிப்பருவம் தொடங்குகிறது. அதனால் ஏதோ ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்தோம், எல்லா குழந்தைகளையும் போல் நம் குழந்தையையும் அனுப்பி வைத்தோம் என்றில்லாமல் பள்ளிக் குழந்தைகளின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்துங்கள். நல்ல பள்ளியை தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று மெத்தனமாக இருக்காமல், அந்த பச்சை மண்ணை சிற்பமாக்கும் செயலில் நீங்களும் முழுமையாக பங்குபெறுங்கள்.
உங்கள் குழந்தை என்றைக்கு முதல் நாள் பள்ளியில் அடியெடுத்துவைக்கிறதோ அன்றே இன்றைய போட்டி உலகத்திற்குள் அதுவும் குதித்துவிடுகிறது. அங்கே அது தாக்குப்பிடிக்க தளராத மனமும், கடும் உழைப்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிந்துசெயல்படும் ஆற்றலும், தோல்வியைக் கண்டு துவளாத மனோதைரியமும் தேவை. அவைகளை வளர்க்க இன்றே தயாராகுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக