தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில் இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.
ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை பிளஸ் 2 உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வு நடைபெற்றது. அங்கிருந்த நிலையான பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தபோது, 2 மாணவிகள் தங்களது சுடிதார் மேலுடையின் கீழே உள்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்ததைக் கண்டுபிடித்தனராம்.
உடனே, அங்கிருந்த ஆசிரியைகளை அழைத்த பறக்கும் படையினர், விடைகள் எழுதப்பட்ட சுடிதார் மேலுடையின் இடுப்புப் பகுதி வரை வெட்ட உத்தரவிட்டனர். அதன்படி, ஆசிரியைகள் அவற்றை வெட்டி எடுத்தனராம்.
தேர்வு முடிந்த பின்னர் இடுப்புப் பகுதி வரை மேலுடை வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்ட அந்த மாணவிகள், அங்கிருந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியேற மறுத்து கதறி அழுதனராம். அங்கிருந்த ஆசிரியைகள் அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன், அவர்களது பெற்றோரை வரவழைத்து மாணவிகளை அனுப்பிவைத்துள்ளனர்.
பறக்கும் படை அலுவலர்களாகச் செயல்பட்ட இருவரும் அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என்று ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.
“மாற்று ஏற்பாடுகள் எவ்வளவோ உள்ள நிலையில், இதுபோன்று அவமானப்படுத்தும் வகையிலான தண்டனைகள் கண்டிக்கத் தக்கது” என்றனர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக