லேபிள்கள்

19.3.14

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது.
ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக