லேபிள்கள்

22.3.14

தேர்வு கட்டணம் கட்டாததால் வகுப்புக்கு வெளியே நிறுத்திய பள்ளி மாணவி தூக்கிட்டு சாவு

மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். தேர்வு கட்டணம் செலுத்த வில்லை. உடனே தேர்வு கட்டணம் செலுத்தும்படி ஆசிரியை கூறினார். இதை தந்தையிடம் பூஜா கூறினார். அவர் கூலி வந்ததும் வரும் திங்கட்கிழமை கட்டணம் செலுத்துவதாக கூறினார். இதை நேற்று பள்ளியில் பூஜா தெரிவித்தார். கட்டணம் செலுத்தாததால் பூஜாவை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பியதும் இதை பெற்றோரிடம் பூஜா தெரிவித்து அழுதார். அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் தாய் பொற்கொடி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். 


இரவு திரும்பி வந்தபோது பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூஜாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து, பூஜா இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில் மணலி இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் சாவுக்கு காரணமான அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் மாறன் புகார் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக