லேபிள்கள்

20.3.14

பத்தாம் வகுப்பு விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவருக்கான, விடைத்தாள் பக்கம், குறைக்கப்பட்ட நிலையில், அதற்கான கட்டுகள், தையல் இயந்திரம் மூலம், தைக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில் நடத்தப்படும், பிளஸ் 2
பொதுத்தேர்வு, கடந்த, 3ல் துவங்கி நடந்து வருகிறது. இது, இம்மாதம், 25ல் நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, எட்டு லட்சம் மாணவர், தேர்வு எழுதி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் : தேர்வில் எவ்வித குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, தேர்வர்கள், ஹால்டிக்கெட் பெறுவதில் இருந்து, தேர்வு முடிவு வரை, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. விடைத்தாளில், 
ரகசிய குறியீடு எண், தேர்வர் போட்டோ, 40 பக்க விடைத்தாளை தைத்து கொடுத்தல், சீரியல் எண் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், நடப்பு கல்வியாண்டு தேர்வில், எவ்வித குழப்பமும் 
இல்லாமல் தேர்வு நடந்து வருகிறது. தேர்வர்களுக்கு வழங்கப்படும், விடைத்தாளில், 38 பக்கம் விடைகளை எழுதுவதற்கும், இரண்டு பக்கம், மெயின் தாளாகவும் கொடுக்கப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்ட, தேர்வு மையத்தில், தையல் மிஷின் மூலமாக தைக்கப்பட்டு, தேர்வர்க்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும், 26ம் தேதி துவங்க உள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பிளஸ் 2 தேர்வில் பின்பற்றிய முறையை, தேர்வுத்துறை பின்பற்ற வுள்ளது. அதில், விடைத்தாளுக்காக பக்கம், 30 ஆக குறைக்கப்பட்டு, 28 பக்கம், விடைகளை எழுதுவதற்காகவும், இரண்டு பக்கம், மெயின் தாளாகவும் கொடுக்கப்படுகிறது. மூன்று பகுதியாக உள்ள, மெயின் தாளின், முதல் பக்கத்தில், "ஏ' பகுதி தாளில், தேர்வரின் பதிவு எண், பார் கோடு, பெயர், மையம், பள்ளி, குரூப், பாடம், பிறந்த தேதி ஆகிய விவரங்கள் உள்ளன. "பி' பகுதி தாளில், பார் கோடு, விடைத்தாள் திருத்தும் உதவி தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், தலைமை தேர்வாளர், சரிபார்ப்பு அலுவலர் ஆகியோர் கையொப்பம் இடும் பகுதி உள்ளது.

தையல் மிஷின் மூலம்... : "சி' பகுதி தாளில், பேட்ச் எண், சீரியல் எண், பாக்கெட் எண், பார் கோடு ஆகிய விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். "ஏ' பகுதி சீட்டை, தேர்வு எழுதும் மைய அதிகாரியும், "பி' பகுதி தாளை, விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரியும் எடுத்துக் கொள்வர், "சி' பகுதி தாளை, விடைத்தாளிலேயே 
தைக்கப்பட்ட நிலையில் இருக்கும். தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் தொடர்பான எந்த விவகார மாக இருந்தாலும், "ஏ' பகுதி தாளில் உள்ள, பார்கோடு மூலம், "சி' பகுதி தாளை அடையாளம் கண்டு, விடைத்தாளை எடுத்து சரிபார்க்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு, நேற்று முன்தினம், விடைத்தாள் கட்டு அனுப்பப்பட்டது. அவை, நேற்று, தையல் மிஷின் மூலம், 30 பக்கம் கொண்ட விடைத்தாள் கட்டாக தைக்கப்பட்டது. "பிளஸ் 2 தேர்வரை காட்டிலும், பத்தாம் வகுப்பு தேர்வருக்கு, 10 பக்கம் குறைத்து வழங்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, வரும், 26ல் துவங்கி, அடுத்த மாதம், 9ல் நிறைவடைகிறது. இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக