தேனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், தேனி மாவட்டக் கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கி பயிற்சி அளித்தனர்.
அப்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் வீட்டிலேயோ அல்லது அரசியல் சார்ந்த நபர்களின் வீடுகளிலேயோ தங்கக்கூடாது. எங்காவது ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைந்ததால் உடனே சென்று அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் அனுமதியின்றி செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள் எதும் உள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
தவறு நடந்தால் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப் பெட்டிகளை நீங்கள் வாக்கு சாவடிக்கு எடுத்துச் செல்லும்போது போகும் பாதையில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக மாற்றுப்பாதையில் கொண்டு சென்று உரிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவேண்டும், அதற்கு மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
வாகன சோதனையில் ஈடுபடுபவர்கள் பாரபட்சமின்றி வாகன சோதனையில் ஈடுபடவேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தால் அதனை 90 நிமிடங்களுக்குள் சரி செய்யவேண்டும். அல்லது புதிய வாக்குபதிவு எந்திரத்தை கொண்டு சென்று வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக