லேபிள்கள்

19.3.14

வரும் கல்வி ஆண்டில் கவுன்சிலிங் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் கல்வி பட்டப்படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை, பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம், தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிகளின் படி நடைபெறும் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்றவுடன் பல்கலைக்கழக நிர்வாகியாக பொறுப்பேற்ற ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், கடந்த ஆண்டு பல்கலைக்கழக பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலமும், தகுதி அடிப்படையிலும், தமிழக அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி சேர்க்கை நடத்தினார்.
வரும் கல்வி ஆண்டு அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டம் 2013 (தமிழகஅரசு சட்டம் 20, 2013) அமலுக்கு வந்த பிறகு தொழில்கல்வி படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை மற்றும் இவை சார்ந்த படிப்பகளுக்கான சேர்க்கை, தமிழக தொழில்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006 (தமிழ்நாடு சட்டம் 3, 2007)படி நடைபெறும். இந்த சட்டத்தின்படி தொழில் படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறும்.
தமிழக அரசாணையின்படி (நிலை எண்.39, 28-2-2014) அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில் கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006-ன் படி செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தொழில்கல்வி பட்ட படிப்புகளுக்கான 2014-15 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம், தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிகளின் படி நடைபெறும். கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைநகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பம் விநியோகத்திற்கான தேதி, கலந்தாய்வு தேதி மற்றும் சேர்க்கைக்கான இதர விபரங்கள் விரைவில் முன்னணி பத்திரிகைகளில் விளம்பரங்கள் மூலமாகவும், பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in மூலமாகவும் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக