பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன் பின், சென்னை பல்கலைகழகத்தின், திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார்.
இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்றார். 'பட்டப் படிப்பு முடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது.
வாரியத்தின் முடிவை எதிர்த்தும், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, நாகமுத்து விசாரித்தார்.
கனிமொழி சார்பில், வழக்கறிஞர், தாட்சாயணி ரெட்டி ஆஜரானார்.
நீதிபதி, நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
ஏற்கனவே, ஜோசப் இருதயராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், 'பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்ததை, பரிசீலிக்கலாம்' என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், மனுதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், பரிசீலிக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவை
பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக