இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு முடிந்தவரை கூடுதலான ஆசிரியர்களைக் கொண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. முதலில் மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கிலப் பாடங்களும், பிறகு, முக்கியப் பாடங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
வேதியியல் வினாத்தாளும் எளிமை: மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வு வினாத்தாள்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இயற்பியல் வினாத்தாளைப் போலவே வேதியியல் வினாத்தாளும் நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களுக்கு எளிமையானதாக இருந்தது. முக்கியப் பாடங்களில் கணிதப் பாடம் மட்டும் சற்றுக் கடினமாக இருந்தது. மீதமுள்ள 2 பாடங்களும் எளிமையாக இருந்தன. வரும் வியாழக்கிழமை (மார்ச் 20) உயிரியல் பாடத்தோடு முக்கியப் பாடத் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.
35 மாணவர்கள் சிக்கினர்: பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 24 மாணவர்கள் திங்கள்கிழமை பிடிபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 மாணவர்கள் பிடிபட்டனர். கணக்குப் பதிவியல் பாடத்தில் காப்பியடித்ததாக 11 பேர் பிடிபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக