லேபிள்கள்

17.5.15

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக் ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.

பணிகள் முடக்கம்:

இவற்றில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பணி மாறுதல், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வின் குளறுபடிகள், பாடநூல் கழக, 'டெண்டர்' பிரச்னைகள், தேர்வுத்துறை மறுமதிப்பீடு பிரச்னைகள், டிப்ளமோ தேர்வுப் பிரச்னை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு பிரச்னைகள் என, பல வகை வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால், கல்வித் துறையில் பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. பல பணி நியமனங்கள், புதிய இடங்கள் உருவாக்குதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல், புத்தகங்கள் அச்சிடுதல், புதிய ஆட்களை நியமித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலாவது வழக்குகளை விரைந்து முடிக்க, கல்வித் துறைக்கு அரசு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


ஆலோசனை கூட்டம்:

இதுதொடர்பாக, பள்ளி கல்விச் செயலர் சபிதா தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் துறை வாரியாக வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுதொடர்பாக துறை வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக