மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.
முதற்கட்ட பணி...:
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இப்பாடத்திட்டப்படி, முப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது. இதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாக மாற்றியமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி துவங்கி உள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தேசிய திறந்தவெளி பள்ளியான என்.ஐ.ஓ.எஸ்., ஆகிய பாட புத்தகங்களுக்கு ஈடாக, தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. தேசிய திறந்தவெளி பள்ளி பாட புத்தகங்களுடன், தமிழக பாடப்புத்தகங்களை ஒப்பிட்டு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் முதற்கட்ட பணி நடந்து வருகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருது, தெலுங்கு, கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பல பாடப்புத்தகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
நிறை, குறைகள்:
எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், 10க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாட புத்தகங்களும், தமிழக பாடப்புத்தகங்களுடன் ஒப்பிடப்படும். பின், தமிழக பாடப்புத்தகங்களின் நிறை, குறைகள் குறித்து விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய, எஸ்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக