லேபிள்கள்

20.5.15

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை முடிந்துபள்ளி திறந்தவுடன் அவர்கள் புதிய பள்ளியில் சேர்ந்துவிடுவது வழக்கம். இதற்கு வசதியாக, விருப்பமும், தகுதியும் உடைய ஆசிரியர்களிடம் இருந்து ஏப்ரல் கடைசி வாரத்திலேயே தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுவிடுவார்கள்.இடமாறுதலைப் பொருத்தவரையில், முதலில் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடும். அந்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு இட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முறைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவர். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டு, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும். அதைத்தொடர்ந்து, மே மாதம் இறுதியில் கலந்தாய்வுநடத்தப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் புதிய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிடுவர். ஆனால், இந்த ஆண்டு என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இன்னும் அரசாணையே வெளியிடவில்லை. இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? நடக்காதா? என்பதுகூட தெரியவில்லை” என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக