லேபிள்கள்

17.5.15

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு இலவச பஸ் பாஸ் பறிமுதல் செய்யப்படும் :

பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு
பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் உயர்மட்ட குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பஸ்களில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்களை போக்குவரத்து காவல்துறையால் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டு பள்ளிகளுக்கு தெரிவிக்கும்போது அப்பள்ளி நிர்வாகம் மாணவரை எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதைக் கண்டறிந்து தகவல் பெறப்படும்போது அம்மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையால், பஸ் ஸ்டாப்புகளில் விழிப்புணர்வு அட்டைகளை வைப்பது, பாதுகாப்பு முறைகள் குறித்த விளம்பர துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து மாணவர்களுக்குத் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
போக்குவரத்துத் துறையால் பல முறை எச்சரிக்கை செய்தும் தொடந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திரும்ப பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உயர்மட்டக் குழுவின் பரிந்துரையில், ‘பஸ் டே’ கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக