புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012ல் பதவி உயர்வு பெற்றேன். இதன்பின், துறை அதிகாரிகளின் அனுமதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தேன். அந்த பணி எனக்கு கிடைத்தது. ஆனால் என்னை விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளையில் நான் தொடர்ந்த வழக்கில் என்னை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 21.7.2014ல் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்தேன்.
ஆனால் எனது பணி புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் தான் வரும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 1.4.2003க்கு பிறகு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே புதிய பென்ஷன் திட்டம் பொருந்தும். அதற்கு முன்னர் சேர்ந்து, தொடர்ச்சியாக பணியாற்றுவோருக்கு பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என விதிகள் உள்ளன. இதன்படி எனக்கு பழைய பென்ஷன் திட்டமே தொடர வேண்டும். நான் பணி தொடர்ச்சியாக அரசின் கீழ் தான் பணியாற்றியுள்ளேன். எனவே, பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘துறை அதிகாரிகளின் முன் அனுமதி பெற்றே விண்ணப்பித்துள்ளார். ஐகோர்ட்டின் உத்தரவுக்கு பிறகே பணியில் இருந்து மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகே துறை ரீதியாக வேறு பணியில் சேர்ந்துள்ளார். இதை பணி இழப்பு காலமாக கருத முடியாது. எனவே, பழைய பென்ஷன் திட்டத்தின் பணி தொடர்ச்சி உள்ளதாக கருதி பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக