தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் படி, தமிழக தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் உள்ள 25% இடங்கள் நிரப்பப்பட்டது.
இதில் கடந்த 2012-13, 2013-14, 2014-15 ஆகிய 3 கல்வியாண்டுகளில், தமிழக பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் சுமார் ரூ.150 கோடி நிலுவையில் இருப்ப தாக தனியார் பள்ளிகள் அரசு மீது குற்றம் சாட்டின. இந்தாண்டு நிலுவைக் கல்விக் கட்டணத்தை அரசு அளித்தால் மட்டுமே, 25சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்றும் அறிவித்தன.
இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவும் முடிவு செய்தது. இந்நிலையில் 15.5.2015 தேதியிட்ட அரசாணை எண் 102ன்படி, தமிழக அளவில் 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.97 கோடி வழங்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013-14 கல்வியாண்டுக்கான கட்டணமாக ரூ.26 கோடியும், 2014-15ம் கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணமாக ரூ.71 கோடியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தொகையானது தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் மூலம் பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சுயநிதி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசு நிலுவையில் இருந்த கல்விக் கட்டணத்தை அளிக்க அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் நடத்த இருந்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இனி வழக்கம் போல், தனியார் பள்ளிகளில் 25%ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக