அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு தொழில் துறை சார்புப் பணிகளில் உதவிப் பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிட்டு, ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. நேர்காணலும் இந்தத் தேர்வு முறையில்உண்டு.இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு தேர்வாளர்கள் பெயர்களுடன் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது.அதன் பிறகு, நேர்காணலுக்கு வருமாறு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட தங்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை எனவும், எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களை வெளியிடவில்லை எனவும் கூறி, எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகிய இருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரினர்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 82 தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தவர்களை மட்டுமே அடுத்து நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்கள் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றுள்ளனர். இருந்தாலும், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறை திருப்தியளிக்கவில்லை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த பின்னர் நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு தேவையில்லாதது. மேலும், பல ஆயிரம் பேர் எழுதுகிற குரூப்-4 எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன. குறைந்த அளவு தேர்வு எழுதிய உதவிப் பொறியாளர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்படாதது சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, அரசுப் பணிகளில் அதிக அளவு மதிப்பெண் பெற்ற தேர்வர்களை நேர்காணலுக்கு அழைக்கும் முன், எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட வேண்டும்.இதன்மூலம் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். எனவே, உதவிப்பொறியாளருக்கான தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக