பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினால், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
100 சதவீதம்:
பிளஸ் 2 தேர்வில் மோசமான தேர்ச்சியால், அரசு பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், 100 சதவீத தேர்ச்சி மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பெற்றால், அப்பள்ளி தலைமை ஆசிரியர், பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நடந்தது.
பரிதாப நிலை:
இக்கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் பரிதாப நிலைக்கு என்ன காரணம்; குறிப்பாக ஆதிதிராவிட பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளை விட மோசமான நிலைக்கு சென்றது ஏன்? சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட, வரும் கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே பாடுபட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
உத்தரவு:
சிறந்த தேர்ச்சி பெறும் மாவட்டங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்; ஆசிரியர் காலியிடங்களை மேலிடத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக