லேபிள்கள்

30.3.14

தனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

நிர்ணயம் : தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை, அரசால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு செய்து வருகிறது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான பழைய கல்விக் கட்டணம், கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, வரும் கல்வி ஆண்டுக்காக, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய, இக்குழு, முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பங்களை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், தனியார் எம்.பி.பி.எஸ்., கல்லூரிகள், 12ம்; பல் மருத்துவக் கல்லூரிகள், 18ம் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, வரும், 2014 - 15ம் கல்வி ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

வலியுறுத்தல் : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, ஆண்டு கல்விக் கட்டணத்தை, 3.5 லட்சம் ரூபாயில் இருந்து, 6 லட்சம் ரூபாயாகவும், பி.டி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை, 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என, பெரும்பாலான மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தில் வலியுறுத்தி உள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், புதிய கல்விக் கட்டணத்தை, பாலசுப்ரமணியன் குழு அறிவிக்கும். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை, ஏற்கனவே நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணம், வரும் கல்வி ஆண்டு வரை பொருந்தும். 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, தேசிய தர நிர்ணய மதிப்பீட்டு குழுவின் (நாக்) அங்கீகாரம் பெற்ற பாடப் பிரிவுகளுக்கு, 45 ஆயிரம் ரூபாயும், அங்கீகாரம் பெறாத பாடப் பிரிவுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக