பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 5 மதிப்பெண் கேள்விக்குரிய படம் தெளிவாக இல்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினா எண் 53-இல் படத்தைப் பார்த்து கேள்விகளுக்கு விடையளிக்கும் பகுதி உள்ளது.
அதில் ஒரு சிறுவன், மீன் தொட்டியைப் பார்ப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதில் மீன் தொட்டி என்பதை கேள்வியைப் படித்த பிறகே புரிந்துகொள்ள முடிகிறது. இதனால், மீன் தொட்டி தொடர்பான 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க கிராமப்புற மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
படம் தெளிவாக இல்லாததால் இந்தக் கேள்விக்கு விடையளித்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஒரு பகுதியைத் தவிர்த்து ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காப்பியடித்த 30 மாணவர்கள் சிக்கினர்: மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக 30 மாணவர்கள் பிடிபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 14 பேர் பிடிபட்டனர்.
விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பத்தாம் வகுப்புத் தேர்விலும் காப்பியடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கியது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை, பள்ளிகளின் மூலமாக 10 லட்சத்து 38 ஆயிரம் பேரும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் பேரும் எழுதி வருகின்றனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை ஏப்ரல் 10 முதல் 19-ஆம் தேதி வரை மதிப்பீடு செய்ய அரசுத் தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக