உடலில் தீப்பற்றிய காயத்துடன், மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஸ்வாதிகா, நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாள் பொதுத்தேர்வை, மதுரை அரசு மருத்துவமனையில் எழுதினார்.
காஞ்சரம்பேட்டையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி கஜேந்திரன் மகள், ஸ்வாதிகா. இவர் சின்னப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் இம்மாணவி, தனது கூரைவீட்டில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு படித்துக் கொண்டிருந்தார்.
திடீரென கால் இடறியதால், அரிக்கேன் விளக்கு மீது விழுந்து, மண்ணெண்ணெய் சிதறி, தீப்பிடித்தது. அவர் அணிந்திருந்த பாலிஸ்டர் சீருடையில், முதுகு முழுவதும் எரிந்து, இடது கையிலும் தீப்பற்றியது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தேர்வெழுத ஆசைப்பட்டார் ஸ்வாதிகா.
கலெக்டர் சுப்ரமணியன், ஆர்.டி.ஓ., ஆறுமுக நயினார் அனுமதியுடன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, மாணவி தேர்வெழுத ஏற்பாடு செய்தார்.
மருத்துவமனையின் 209வது வார்டில், தனியறையில், மாலைப்பட்டி உடற்கல்வி ஆசிரியை ஆர்த்தி, மாணவிக்காக தேர்வெழுதினார். வலது கையில் குளுக்கோஸ், இடதுகையில் ஆழமான காயத்துடன், கைகளை அசைக்க முடியாமல், முதுகின் எரிச்சல் தந்த வேதனையுடன், தேர்வெழுத தயாரானார்.
ஆசிரியை கூறுகையில்," தேர்வு எழுத, காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை, நேரம் ஒதுக்கப்பட்டது. கேள்விகளை 2 முறை வாசித்துக் காட்ட சொன்னார். அதன்பின், மடமடவென, பதில்களைச் சொன்னார். மாணவி பதில் சொன்ன வேகத்திற்கு, நானும் எழுதி முடித்தேன். இரண்டே மணி நேரத்தில் சொல்லி முடித்து விட்டார். தேர்வும் முடிந்துவிட்டது,' என்றார்.
தாங்க முடியாத வலியுடன் விடை எழுதிய மாணவிக்கு, இடையிடையே வலியை குறைக்கும் வகையில், ஊசி போடப்பட்டது. மகள் நல்ல மதிப்பெண் எடுப்பாள் என்ற நம்பிக்கையுடன், மாணவியின் பெற்றோர், தேர்வெழுதும் வரை, அறைக்கு வெளியே காத்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக