சென்னை பல்கலையில் இரண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இதனால், அப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்காது என கூறப்படுகிறது.
'மைக்ரோ பயாலஜி':
சென்னை பல்கலையில், சேப்பாக்கம், தரமணி, கிண்டி, மெரீனா வளாகங்கள் உள்ளன. இதில், தரமணி வளாகத்தில் உள்ள, ஏ.எல்., முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் முதுகலை மையத்தில், 'மைக்ரோ பயாலஜி' துறையின் கீழ், எம்.டி., மைக்ரோ பயாலஜி (நுண் உயிரியல்) மற்றும் எம்.டி., பெத்தாலஜி (நோய் குறி ஆய்வு) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கு, மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற வேண்டும். ஏற்கனவே, இப்பாடப்பிரிவுகளில், கடந்த முறை, மாணவர் சேர்க்கையை நிறுத்த, மருத்துவ கவுன்சில் முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில், மதிப்பீட்டாளர் தாக்கல் செய்த அறிக்கையில், இரண்டு பாடப்பிரிவுகளுக்கான, பேராசிரியர்கள் பற்றாக்குறை, ஆய்வுகூட பற்றாக்குறை, ரத்த வங்கி இல்லாதது போன்றவை சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. எனவே, இரண்டு பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரத்தை, சமீபத்தில் மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது; அதற்காக, எட்டு காரணங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலை தரப்பில் கூறியதாவது:
பேராசிரியர்கள் பற்றாக்குறை:
பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவில் இருந்ததால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை. பல்கலையில் அனைத்து துறைகளிலும் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும், அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அதன் பின், அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பல்கலை தரப்பில் கூறப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., முடிக்கும் மாணவர்கள், சென்னை பல்கலையில், இப்பாடப் பிரிவுகளில் சேர, 50 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக