லேபிள்கள்

2.4.14

உடுமலை கல்வி மாவட்டம் கோரிக்கை வலுக்கிறது!; செவி சாய்க்குமா பள்ளி கல்வித்துறை

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் உடுமலை கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் 200க்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தேர்வு நடத்த அனுமதி, பள்ளி மேம்பாட்டு வசதிகள் குறித்து ஆலோசிப்பது, ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களின் விபரங்களை ஒப்படைப்பது, ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உடுமலை அரசு பள்ளி ஆசிரியர்கள் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை நாட வேண்டியுள்ளதால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு நேரங்களின் போது அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். உடுமலையை சுற்றியுள்ள வாளவாடி, ஜல்லிபட்டி, கல்லாபுரம் உள்ளிட்ட தொலைதுார கிராமங்களில் உள்ள பள்ளிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். திருப்பூர் கல்வி மாவட்டமாக இருப்பதால், உடுமலை மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் திருப்பூரிலும் அமைக்கப்படுகிறது. குறிப்பாக தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உடுமலையில் தேர்வு மையங்கள் இல்லை. இதனால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வு நேரங்களில் திருப்பூர் மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் சென்று வரவேண்டியுள்ளதால், மனஉைளச்சலுக்கு ஆளாகின்றனர். திருப்பூர் கல்வி மாவட்டமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருப்பினும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் கீழ், உடுமலை இருந்தபோது, இப்பிரச்னைகள் இல்லாமல் இருந்தது. தற்போது உடுமலை திருப்பூர் கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டதால், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். 
உடுமலையைச்சேர்ந்த கல்வியாளர்கள் கூறியதாவது: உடுமலை வருவாய்க்கோட்டமாக இருந்தும், கல்வி மாவட்டமாக இல்லை என்பது வேதனையான ஒன்று. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். திருப்பூர் தனி மாவட்டமாக அமைக்கப்பட்ட போதே உடுமலையை கல்வி மாவட்டமாக அமைத்திருக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின் பல்வேறு காரணங்களால் திருப்பூர் மட்டுமே கல்வி மாவட்டமாக இருந்தது. ஆசிரியர்கள் ஒவ்வொரு சிறு சிறு பணிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு நேரங்களில் தேர்வு குறித்த விபரங்கள் அறிவதில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் குழப்பம் ஏற்படுவது இரண்டு ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. பலமுறை இப்பிரச்னைக்கான தீர்வு வேண்டி பள்ளிக் கல்வித்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மென்மேலும் வேதனைப்படுத்துவதாக உள்ளது. சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள், மாநில அளவில் சாதனைபுரியும் மாணவர்கள், அதிக தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை உடுமலை பள்ளிகள் கொண்டுள்ளன. இதை தக்க வைத்துக்கொள்ள, உடுமலை கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும். திருப்பூர் சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற பிரச்னையால் ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகவும் வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியரின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித்துறை இப்பிரச்னைக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கல்வியாளர்கள் கூறினர்.

'விரைவில் தீர்வு காணப்படும்': பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உடுமலை கல்வி மாவட்டமாக மாற்றுவது குறித்து அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும்' என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக