லேபிள்கள்

5.4.14

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், 'அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்,' என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று, வழக்கை முடித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி கொட்டாரன்குளம் சுரேஷ் தாக்கல் செய்த மனு: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கழிப்பறையை சுத்தம் செய்து, பிற பணிகளை செய்யுமாறு, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் மனதளவில் பாதித்து, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேப்பன்குளம் ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும். போதிய துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க, உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பதில் மனு: வகுப்பு நேரங்களில், சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டடாயப்படுத்தியதாக, புகார் வரவில்லை. அடிப்படை சுகாதாரத்தின் அவசியம் பற்றி, மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. கழிப்பறை வசதி இல்லாத 2733 பள்ளிகள், குடிநீர் வசதி இல்லாத 702 பள்ளிகளுக்கு, 'நபார்டு' திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 36 ஆயிரத்து 813 அரசுப் பள்ளிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும். பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 5712, முழுநேரம் 384, பகுதிநேரமாக 5950 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். குழந்தைகளை தண்டிக்கக்கூடாது; துன்புறுத்தக்கூடாது என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், என குறிப்பிட்டார்.


நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு: அரசுத்தரப்பு பதில் மனுவை, பதிவு செய்து கொள்கிறோம். மகாத்மா காந்தி,'தங்கள் கழிப்பறையை, தங்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்,' என்றார். சுகாதாரத்தை, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதன் மூலம், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர முடியும் என்பதை, மனுதாரர் கவனிக்கத் தவறிவிட்டார். மனு மீதான விசாரணை முடிக்கப்படுகிறது, என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக