நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் சார்ந்த விஷயத்தில், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டின் இறுதியில், மாநில அளவில் 900 பள்ளிகள் மூடப்பட்டன. இக்கல்வியாண்டில், 1000 பள்ளிகள் மூடப்படலாம் என, வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அங்கீகாரம் பெறாமல் விதிமுறைகளை மீறி, சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களும், பள்ளிகளின் நிலை அறியாமல், மாணவர்களை சேர்த்து செல்கின்றனர். இப்பள்ளிகளுக்கு, ஏப்., 22 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலும் பள்ளி அங்கீகாரம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
கோவை மாவட்டத்தில், தற்போது 70 நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யும் பட்டியலில் உள்ளன. இப்பள்ளிகளின், பெயர்கள் மற்றும் விபரங்கள் கால அவகாசம் முடிந்த பின் முறைப்படி கல்வித்துறையால் வெளியிடப்படும். இதற்கு முன், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், கல்வியாண்டு துவக்கத்தில் பிரச்னைகள் ஏற்படும்.இதனால், அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறதா, என்பதை கண்காணிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மதிக்காமல், மாணவர்கள் சேர்க்கை நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், விழிப்புணர்வுடன் செயல்பட மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக