லேபிள்கள்

4.4.14

+2 மாணவர்கள் அதிருப்தி: கணக்கு தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

பிளஸ் 2 கணக்கு தேர்வில் 47வது கேள்வியை பாதி அளவுக்கு மேல் எழுதியவர்களுக்கு மட்டுமே முழுமதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு 8 மதிப்பெண்ணும், ஆங்கில வழி மாணவர்களுக்கு 7 மதிப்பெண்ணும் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிளஸ் 2 கணக்கு பாடத் தேர்வின் கேள்வித்தாளில்  4 வது கேள்வியை மாற்றி கேட்டுள்ளனர்.  இதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுதுவதில் குழம்பிப்போனார்கள். 

அடுத்ததாக 47வது கேள்வி, புத்தகத்தில் இருப்பதுபோல் கேட்கப்படவில்லை. அதற்கு விடை எழுதினால் புத்தகத்தில் இருப்பது போல விடை வராது. அதே கேள்வியில் இடம் பெற்ற குறியீடுகளில் ‘எக்ஸ்‘ மற்றும் ‘ஈ‘ குறியீடுகள் மாறியுள்ளன. ‘ஈ‘ என்ற குறியீடு கீழே இறக்கி அச்சிட்டு இருக்க வேண்டும். மேலே அச்சிட்டுள்ளனர். இதனால் விடை எப்படி எழுதுவது என்று புரியாமல் மாணவர்கள் குழம்பினர். 55வது கேள்வி பெரும்பாலும் வெளிப்படையாக கேட்கப்படும். ஆனால் இந்த முறை மூன்று மூன்று மதிப்பெண் வரும் வகையில் பிரித்து கேட்கப்பட்டுள்ளது. 

அதேபோல 55 -பி கேள்வியும் இடம் பெற்றுள்ளது.  கேள்வி எண் 70-பி கட்டாய கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 10 மதிப்பெண்கள். இதை இரண்டு பிரிவுகளாக பிரித்து கேட்டுள்ளனர். கேள்வியே தவறு என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இது தவிர கணக்கு கேள்வித்தாளில் பல இடங்களில் நிறுத்தல் குறிகள், கமா, புள்ளி, கேள்விக்குறி ஆகியவை தவறாகவே அச்சிட்டுள்ளனர். இதுபோன்ற குழப்பங்கள் நிறைய கணக்கு கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளன. இதன்படி பார்த்தால் 29 மதிப்பெண்கள் மாணவர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அதனால் மாணவர்களுக்கு 29 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கேட்டனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கீ-ஆன்சர்கள் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கு தேர்வுக்கான கீ-ஆன்சரில் ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்விக்காக 1 மதிப்பெண் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்வியில் 4வது கேள்விக்கும் மேலும் ஒரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

47வது கேள்வியில் பிழைகள் இருந்ததால் அதற்கு மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் 47வது கேள்விக்கு பதில் எழுத தொடங்கியிருந்தால் மதிப்பெண் வழங்க கூடாது என்றும், அந்த கேள்விக்கு பாதி அளவாவது விடை எழுதி இருந்தால் மட்டுமே 6 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. மற்ற பிழைகள் பற்றி தேர்வுத் துறை கண்டுகொள்ளவே இல்லை. 


இதனால் தமிழ் வழியில் எழுதிய மாணவர்கள் 8 மதிப்பெண்ணும், ஆங்கில வழியில் தேர்வு எழுதியவர்கள் 7 மதிப்பெண்களும் பெறுகின்றனர். தேர்வுத் துறையின் இந்த பாரபட்சத்தால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக