தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏழை மாணவர்கள் உள்ளிட்ட நலிவடைந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் சேர்க்கப்படவேண்டும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளிலும் 2014–2015– ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்த மாதம் மற்றும் அடுத்த மாதமான மே மாதம் நடத்த வேண்டும். ஆனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
ஏப்ரல் மாதம்தான் மாணவர் சேர்க்கைக்கான பணியை தொடங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. அதை மீறி சில பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பள்ளிகளையும் மெட்ரிகுலேஷன் ஆய்வர்கள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு அனுப்பவேண்டும்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்காக 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் (சிறுபான்மை இன பள்ளிகள் நீங்கலாக) நடைமுறைப்படுத்தவேண்டும்.
விண்ணப்ப படிவம் மே மாதம் 3–ந்தேதி முதல் 9–ந்தேதிக்குள் கொடுக்கப்படவேண்டும். மே மாதம் 9–ந்தேதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள். மே 11–ந்தேதி மாணவர்சேர்க்கை பற்றிய இறுதி முடிவை வெளியிடவேண்டும்.
5 பிரிவுகள் மட்டுமே
மேலும் சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.
இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக