லேபிள்கள்

2.4.14

தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்:

1. தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ விதிமுறைகளை நன்றாகப் படித்துவிட்டோ செய்யுங்கள். அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்கை தவறாமல் செலுத்திவிடுங்கள்.
2. உங்கள் தேர்தல் பணி உத்தரவைப் பத்திரமாக எடுத்து வையுங்கள். நகல் எடுத்து வையுங்கள். தபால் வாக்கு விண்ணப்பிக்கவும் தேர்தல் பணிக்காகச் செல்லும்போதும் திரும்பி வீடு வரை வரும்போதும் அதுதான் நம் பாதுகாப்புக் கவசம்.
3. உங்களுக்குரிய வாக்குச்சாவடியை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊரின் பெயரைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரே மாவட்டத்தில் உள்ளன. சான்றாக, சின்னியம்பாளையம் என்ற ஊர் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளன. உங்களுக்குரிய ஊர் எது என்பதில் தெளிவாக இருங்கள்.
4. உங்கள் சாவடியில் நீங்கள் எந்தவகைப் பணியில் இருந்தாலும் மற்ற எல்லோரிடமும் அனுசரித்துப் பேசுங்கள். அவர்களைப் பார்க்கும் போதும் ஃபோனில் பேசும்போதும் வணக்கம் சொல்லியும் நலம் விசாரித்தும் பேச்சைத் தொடங்குங்கள்.
5. டூத்பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பூ, சீப்பு, பர்ஸ், ATM அட்டை, அடையாள அட்டை, பணி ஆணை, மாற்றுத் துணிகள், துண்டு, பெட்ஷீட், காற்றுத் தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, முகப்பவுடர், மூக்குக்கண்ணாடி வைக்கும் பெட்டி, செல்ஃபோன் சார்ஜர், டார்ச் விளக்கு, கொசுவர்த்திச் சுருள், தீப்பெட்டி போன்றவற்றை முதல் நாளே தயாராகப் பைக்குள் எடுத்து வையுங்கள்.
6. ஸ்கெட்ச், பேனா, பென்சில், கத்தரிக்கோல், பிளேடு, ரப்பர், பசை, செல்லோடேப், அளவுகோல் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்ளுங்கள். (சாவடியில் வழங்கப்படும் பொருட்கள் பற்றாக்குறையாகவோ பழுதாகவோ இருந்தால் பயன்படுத்த)
7. புளிசாதம் / தக்காளி சாதம்/ தயிர்சாதம்/ எலுமிச்சை சாதம் ஓரிரு வேளைக்கு பார்சல் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஃப்ளாஸ்க் எடுத்துக் கொள்ளவும்.
8. அதிகமான பணம் கொண்டு செல்வதை அறவே தவிர்க்கவும்.
9. சாவடி ஏஜண்ட்களிடமோ உள்ளூர்வாசிகளிடமோ உங்கள் தொடர்பு எண்ணையோ முகவரியையோ தனிப்பட்ட விவரங்களையோ தெரிவிக்காதீர்கள்.
10. தலைவலி, காய்ச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக