லேபிள்கள்

1.4.14

பின்தங்கிய மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு; இன்று துவக்கம்

மாநில அளவில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பீட்டு தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வில் 3000 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்தில், 'அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்' செயல்பட்டு வருகிறது. 'ஆல் பாஸ் ' திட்டத்தின் காரணமாக, ஒன்பதாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் பெரும்பாலும், அடிப்படை கல்வித்திறன், வாசிப்புத்திறன் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாத காரணத்தால், இடைநிற்றல் அதிகரிப்பதும், 10ம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் விதத்தில், ஒன்பதாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை, முன்னறித்தேர்வின் வாயிலாக கண்டறிந்து, நவ., 15 முதல், மூன்று மாதங்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாநிலத்தில் முதல் முறையாக, இம்மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 2500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின் கற்றல் திறனை மீண்டும் மதிப்பிடுமாறு, 'அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம்' உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக, ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அளவில் இத்தேர்வுகள் இன்றும், நாளையும் அந்தந்த பள்ளிகளிலேயே நடக்க உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பில், ஆரம்பம் முழுவதும் தனி கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் இடைநிலைக்க கல்வி திட்ட' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாணிக்கம் கூறுகையில், ''தேர்வுக்கான வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 3000 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாணவர்கள், ஏப்., 1, 2 தேதிகளில் தேர்வில் பங்கேற்பர். மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அறிக்கை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக