லேபிள்கள்

2.4.14

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன் படம்: நீக்கக் கோரி வழக்கு


எல்.கே.ஜி. இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படத்தை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ஜி.புரட்சி சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு விவரம்:
எல்.கே.ஜி. இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தின் 11-வது பக்கத்தில் எஸ் என்ற ஆங்கில எழுத்துக்கு சூரியன் கண் கண்ணாடி அணிந்திருப்பது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சித் தலைவரைக் குறிக்கும் வகையில் உள்ளது.
இது, சட்டத்துக்குப் புறம்பாகவும், கல்வியின் இயற்கை நியதிக்கு எதிராகவும் உள்ளது. இதே போன்று அந்தப் புத்தகத்தின் 94-வது பக்கத்தில் சூரியன் உதயமாவது போன்ற ஒரு படம் அச்சிடப்பட்டுள்ளது.
அந்தப் படத்தின் அருகே உள்ள வீட்டின் மேற்கூரையில் சேவல் கூவுவது போன்று படம் உள்ளது. இது போன்ற தவறான படங்களை அச்சிடுவதற்கு தமிழக அரசு எவ்வாறு அனுமதி வழங்கியது. இது போன்று படங்கள் புத்தகங்களில் இருப்பதால், ஆரம்பக் கல்வியில் அரசியலை புகுத்துவது போன்று அமையும்.
சிறப்பான பாடத் திட்டத்தை தயார் செய்வதற்குத் தகுந்த வழிமுறைகள் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, இது போன்ற தவறான படங்களை அடுத்த கல்வி ஆண்டு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் எஸ்.சுதர்ஷன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்ரல் 3) ஒத்தி வைத்து நீதபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக