லேபிள்கள்

3.4.14

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு மதிப்பெண் வழங்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்

பிளஸ் 2 உயிரியில் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த எஸ்.சிவஞானம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் பிளஸ் 2 முதல் குரூப் எடுத்து படித்தார. கடந்த மாதம் 20 ஆம் தேதி பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வு நடந்தது. இரண்டு பிரிவுகளாக நடந்த உயிரியல் தேர்வில், முதல் பிரிவில் தாவரவியலும், இரண்டாவது பிரிவில் விலங்கியல் தேர்வும் நடந்தது. ஒவ்வொன்றுக்கும் தலா 75 மதிப்பெண்கள் வீதம் தேர்வு நடந்தது.
அதில், பி-பிரிவின் 25ஆவது கேள்வியில், சோலார் சக்தியின் ஏதாவது 3 பாதிப்புகள் குறித்து பதில் அளிக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால், பாடப்புத்தகத்தில் சோலார் சக்தியின் சுற்றுப்புறச் சூழலுக்கான நல்லது மற்றும் கெட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே கேள்வி தமிழ் வழிக் கல்வி வினாத்தாளில், சோலார் சக்தியின் ஏதாவது மூன்று சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்து பதில் அளிக்குமாறு சரியாக கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி எனது மகள் மற்றும் இதர மாணவிகள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சுற்றுப்புறச் சூழல் என்ற வார்த்தையை வினாத்தாளில் கொடுக்காததால் இந்தக் கேள்விக்கான பதிலை எனது மகள் சரியாக எழுத முடியவில்லை. இதன் மூலம் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணை பெற முடியாத நிலை உள்ளது.
இந்த 3 மதிப்பெண்ணால் 1.5 கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கும். இதன் மூலம் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு எனது மகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் உயிரியல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ள நிலையில், தவறான கேள்வி குறித்து உயர் கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, இந்த வழக்கு முடியும் வரை உயிரியல் விடைத்தாளை திருத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை (ஏப்.2) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக