லேபிள்கள்

2.4.14

தனியார் பள்ளிகளின் அங்கீகார பிரச்னை; 12 பள்ளிகள் தானாக மூடுவதாக அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் புதுப்பிக்காத 60 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் நடப்பு கல்வியாண்டின், பள்ளிகளின் இறுதி வேலை நாளில் மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி தெரிவித்தார்.

பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், இடத்தின் பரப்பளவு, வகுப்பறை, அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள், விளையாட்டு மைதானம், உள்ளூர் திட்டக்குழும சான்றிதழ், உள்ளிட்ட, 40 வகையான வசதிகள் பள்ளிகளில் இருக்கும் பட்சத்தில் தான், பள்ளிகளின் அங்கீகாரம் உறுதி செய்யப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த இரண்டு வருடங்களாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில், பல்வேறு எச்சரிக்கைகளுக்கு பின்பும் செவிசாய்க்காத, 900 தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 1000 பள்ளிகள் இக்கல்வியாண்டின் இறுதியில் மூடப்படும் என்ற அறிவிப்பால், கதிகலங்கிய பல்வேறு பள்ளிகள் அங்கீகாரத்தை புதுபித்தது. கடந்த மார்ச் மாதம், கோவை மாவட்டத்தில் 86 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு மூன்று மற்றும் இறுதிகட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இப்பள்ளிகளுக்கு, இறுதியாக வரும் 22ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''தனியார் பள்ளிகள் அங்கீகாரம் வழங்க போதுமான அளவில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாத 60 தனியார் நர்சரி பள்ளிகள், இறுதிபட்டியலில் இடம்பெற்றுள்ளது. 12 பள்ளிகள் தானாக முன்வந்து மூடுவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், கோவையில் 72 பள்ளிகள் மூடப்படும். தேர்தல் நடைபெற இருப்பதால், பள்ளிகள் மூடுவதற்கான அறிவிப்பு கிடைக்கப்பெற்றதும் உடனடியாக மூடப்படும், '' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக