லேபிள்கள்

28.6.14

பி.இ., கலந்தாய்வை இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்: இழப்பு நாட்களை ஈடுகட்ட அண்ணா பல்கலை அதிரடி

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரை, காலதாமதம் ஏற்படலாம் என்பதால், இந்த நாட்களை ஈடுகட்ட, இரவு, 10:00 மணி வரை, கலந்தாய்வை நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

தள்ளிவைப்பு:


அண்ணா பல்கலையில், பி.இ., கலந்தாய்வு, நேற்று துவங்க இருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, திடீரென, தேதி குறிப்பிடாமல், கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர், ராஜாராம், தொழில்நுட்பகல்வி இயக்குனர், குமார் ஜெயந்த், பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று காலை, அண்ணா பல்கலையில் கூடி, ஆலோசனை நடத்தினர். கலந்தாய்வை, மீண்டும் துவங்கு வதற்கான தேதி, இழப்பு நாட்களை ஈடுகட்ட, கலந்தாய்வு சுற்றுக்களை அதிகரிப்பது எப்படி, கலந்தாய்வு தள்ளிப் போவதால், மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், கலந்தாய்வு இரவு வரை நீட்டித்தால், மாணவர்கள், பெற்றோருக்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அவகாசம்:


நிலுவை விண்ணப்பங்கள் மீது முடிவை எடுக்க, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்குள், ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை எடுக்கும் என, தெரியாத நிலை உள்ளது. இரு நாட்களுக்குள், நிலுவை விண்ணப்பங்கள் மீது, ஏ.ஐ.சி.டி.இ., முடிவை எடுத்துவிட்டால், அடுத்த இரு நாட்களில், சம்பந்தப்பட்ட புதிய கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை வழங்கி, கலந்தாய்வு தேதியை, அண்ணா பல்கலை அறிவிக்கும். ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., செயல்பாடு எப்போது முடியும் என, தெரியாத நிலை இருப்பதால், கலந்தாய்வு துவங்கும் தேதி குறித்தும், ஒரு முடிவுக்கு வர முடியாமல், அண்ணா பல்கலை திணறி வருகிறது. எப்படியும், 3 முதல் 5 நாட்கள் வரை, கலந்தாய்வு தள்ளிப் போகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களை ஈடுகட்ட, இரவு, 10:00 மணிவரை, கலந்தாய்வை நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

கலந்தாய்வு எப்போது?


இந்த விவகாரம் குறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், குமார் ஜெயந்த், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: ஏ.ஐ.சி.டி.இ.,யின் நடவடிக்கையை பொறுத்தே, எங்களது நடவடிக்கை இருக்கும். ஏ.ஐ.சி.டி.இ., ஒரு நாளில் வேலையை முடிக்குமா, இரு நாளில் முடிக்குமா என, தெரியாது. தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் மீதான பரிசீலனையை, ஏ.ஐ.சி.டி.இ., முடித்துவிட்டால், அதன்பின், எங்களது பணியை, விரைந்து முடித்து, கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சுற்றுகள் பத்தாக அதிகரிப்பு?


ஒவ்வொரு நாளும், காலை, 7:30 மணி, 9:00, 10:30, 12:00, 2:00, 3:30, 5:00, 6:30 என, எட்டு சுற்றுக்களாக, கலந்தாய்வு நடத்தப்படும் என, ஏற்கனவே, அண்ணா பல்கலை அறிவித்திருந்தது. மாலை, 6:30 மணி சுற்று கலந்தாய்வு முடியவே, இரவு, 8:00 மணியாகிவிடும். தற்போது, இழப்பு நாட்களை ஈடுகட்ட, மேலும், இரு சுற்றுக்களை அதிகரிக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும், 10 சுற்றுகளாக, கலந்தாய்வு நடக்கும். இதனால், இரவு, 10:00 மணி வரை, கலந்தாய்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக