லேபிள்கள்

27.6.14

TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும். 

கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லாதவை என்ற குரல்களும் பல ஆசிரியர்கள்,கல்விச் சங்கங்களில் இருந்து வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே குழப்பங்களும், குளறுபடிகளும் ஆரம்பித்தன.

முதல் குளறுபடியாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததில் துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) போன்றவற்றில்கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண்களில் சலுகைகள், அவை தொடங்கியநாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2014) நடக்கப் போகும் தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.மாநில அளவில், ஆராய்ச்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நடத்தப்படும் தகுதித் தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் போது, ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வில் திறமை மட்டுமே முக்கியம், இடஒதுக்கீடு திறமையையும் தகுதியையும் குறைத்துவிடும் என்ற அரதப்பழசான சொத்தை வாதம் முன் வைக்கப்பட்டது.(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்'(Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employmentequityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).

இரண்டாவது குளறுபடி, முதல் முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் குறைவான நேரம் வழங்கப்பட்டது. 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள் படித்து, அதற்கு விடையை யோசித்துவிடைத்தாளில் குறிக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் தகுதியை கண்டறிய வைக்கப்பட்டத் தேர்வு, ஆசிரியர்களின் சிந்திக்கும், செயல்படும் வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத் தேர்வாக மாறியது. நுண்ணறிவைச் சோதிக்க உளவியலாளர்கள் நடத்தும் சோதனை முறைகளில் கூட இப்படி சிந்திக்கும் வேகத்தை அளவிடக்கூடிய சோதனைகள் இருக்கிறதா தெரியவில்லை. இதுவரை இல்லாமல் போனால், உளவியல் மருத்துவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும்.இந்த நேரக்குளறுபடியும் கடினத்தன்மையும் வரலாறு கண்டிராத ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத் தகுதித் தேர்வில் காட்டியது. சுதாரித்த அரசு, உடனே ஒரு துணைத் தேர்வை நடத்தியது. பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்றான தேவை - இருப்பு (Demand - Supply) கோட்பாட்டின் காரணமாக ஆசிரியர்களின் சிந்தனை வேகத்தை அளவிடாமல், அவர்களின் தகுதியைச் சோதிக்கும் வகையில் அந்தத் துணைத் தேர்வு நடத்தப்பெற்றது.

மூன்றாவது குளறுபடியாக சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) என்ற பெருங்குழப்பம் விளங்கியது. ஆனால், முதல் இரண்டு தகுதித் தேர்வுகளிலும் தேவையை விட இருப்பு குறைவாக இருந்ததால் இந்தக் குளறுபடி தலையெடுக்கவே இல்லை. ஆனால், மூன்றாவதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் (2013ஆம் நடத்தப்பட்டது) தீராத தலைவலிச் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.இதுவரையிலான குளறுபடிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருங்குளறுபடிகளை 2013ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு இன்று வரை தீராத் தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது. நேரம் ஏற்கெனவே சரி செய்யப்பட, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை மதிப்பெண்கள் இல்லை என்ற அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டத் தேர்வு முடிவுகள்நவம்பர் 5ஆம் தேதி வெளிவந்தது. விடைகளில் ஏற்பட்ட குழப்பங்கள் சரி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் 11-01-2014 அன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும்ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக முதல்வரின் பிறந்த நாள் அன்று இவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்று வாய்மொழியாகத் தகவல் வெளிவந்தது.மூன்று முறை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகளிலும் இந்த மதிப்பெண் சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை, 2012 ஆம் ஆண்டுமுதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், ஆசிரியர் தேர்வு வாரியமும் விடாப்பிடியாக இட ஒதுக்கீடு தகுதியைக் குறைத்துவிடும் என்றே பல இடங்களிலும், நீதிமன்றத்திலும் வாதிட்டு வந்தனர். அடுத்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரது நீதிமன்ற செயற்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை மூலமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. 

இதுவரை சலுகை மதிப்பெண்கள் தகுதியைக் குறைத்து விடும் என்று வாதிட்ட அரசு, ஐந்து சதவீதம் சலுகை வழங்கப்பட்டால் 82.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளுக்குப் பதிலாக 82 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றே அறிவித்தது.இவ்வாறு கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை வெகு வேகமாக செயல்படுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் என்று பல காரணங்களால் இந்தப் பணிகள் தள்ளிப் போனது.இதற்கிடையில் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) குளறுபடி இந்தாண்டு தேர்வில் பெரியளவில் குழப்பத்தை விளைவிக்க தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் இதுவரை பணி நிரப்பப்படாமல் உள்ளது. அரசு அறிவித்த சிறப்பளிப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையானது இதுவரை புள்ளியியல் கண்டிராத உத்திகளைக் கொண்டிருந்தது. 

தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் 42 வழங்கப்படும். ஆசிரியர் பட்டப் படிப்பில் 69.98 மதிப்பெண் பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் பன்னிரெண்டும், 70.00 பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் 15ம், 99.98மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 15 சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே போலத்தான் இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இத்தகைய கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அறிவியல்பூர்வமாக இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் பணி நிரப்பும் பணிகள் மந்தமைடைந்தது.இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின் குழப்பங்கள் .ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அவர்களது இணைய தளத்தில் எந்த தகவலும் முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை. ஊடகங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் தெரிவித்தார், வட்டாரம் தெரிவித்தது என்றே தகவல்கள் வருகிறது. இதனாலேயே பல வதந்திகளும் உலா வருகிறது. 

சமீபத்திய வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம் அறிவிக்காத வரையில், அது வதந்திதான்.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப் போல,UG-TRB தேர்வு நடத்தப்படும், அதில் பெறும் மதிப்பெண்களில் 50 சதவீதமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சிறப்பளிப்பு மதிப்பெண்ணின் 50 சதவீதமும் சேர்த்து பெறப்படும் மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால், அது எளிமையானதொருதேர்வை மேலும் மேலும் சிக்கலாக்குவதற்குச் சமம் ஆகும். அதோடல்லாமல், முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் தேர்வு முறையைப் போன்ற தேர்வேஎன்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? முதுநிலை ஆசிரியர்களுக்குப்பின்பற்றப்படுவது போன்ற அந்த ஒரு தேர்வே போதாதா? அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் சிக்கலான இரண்டு தேர்வு? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுவரை வெளிவந்த மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது அறிவிக்கப்படவே இல்லை. தேர்வு எழுதப் போகும் தேர்வர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசும், தேர்வு வாரியமும் நினைக்கிறதா? அல்லது அவர்களிடமே அந்தத் தகவல் முழுமையாக இல்லையா?இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகளையும் இதே தகுதித் தேர்வை எழுத வேண்டும், என்ற குளறுபடிகள் தாண்டவமாட, அவர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களுக்கானத் தேர்வுகளும் குளறுபடியும் ஓராண்டாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகத் தான் இருக்கும். கல்வித்துறையில் இத்தகைய குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றப் படியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் இத்தனை வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது கல்வித்துறை. இத்தனை வழக்குகளை எங்களால் கையாளமுடியவில்லை, அத்தனை வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அண்டை மாநிலங்களில் பெருமளவு குழப்பம் இல்லாமல், நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஏன் தமிழகத்தில் மட்டும் இத்தனை குழப்பமான சூழ்நிலை நிலவ வேண்டும்? பதில் மிகவும் எளிமையானது. 

தேர்வுக்கான நெறிமுறைகள் தெளிவாக வகுக்கப்படாமையே ஒரே காரணம்.இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டித்தேர்வுகளுக்கான வாரியத்தை அமைத்த மாநிலத்தில் இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான். ஆசிரியர் தேர்வு வாரியம், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வினாத்தாளை வடிவமைக்க எப்படி ஒரு குழு அமைத்துச் செயல்படுகிறதோ அதே போல,தேர்வு நடத்தும் முறைகளையும், பணி நியமன முறைகளையும், சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான முறைகளையும், ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைக்க ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடியொட்டி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இத்தனைச் சிக்கல்கள் இல்லாமல்இருந்திருக்கும்.தேர்ச்சி பெற்று பல மாதங்களாக பணி கிடைக்காமல் தேர்வர்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்திருக்காது. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஊதியம் இல்லாமல், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களை சேவை செய்ய வருமாறு அழைக்க வேண்டிய கட்டாயமும் இருந்திருக்காது.

ஆசிரியர் தேர்வு வாரியமும், அரசும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின் விளைவு, தேர்வர்கள் நீதிமன்றங்கள் மூலமாக இந்தவழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க உதவிக் கொண்டிருக்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கியது, சிறப்பளிப்பு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்பட வேண்டும், சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்று எல்லாவற்றையும் நீதிமன்ற உத்தரவின் நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்களில் பிரச்சினைகள் என்றால், அதனை முற்றாகத் தீர்க்க இற்றைப்படுத்தல்களைச் செய்யாமல், பேட்ச்கள் (Patch) எனப்படும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் வழிமுறைகளையே செய்வார்கள். அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல் நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவை கட்டாயம் பின்பற்றும் படியும், தேர்வு முடிந்த குறிப்பிட்ட காலவரையறையில் பணி நிரப்புதல் செய்யப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை வாரியம் செயல்படுத்தும் படி செய்ய வேண்டியதுதான். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை நீதிமன்றஉதவியோடு கல்வியாளர்களாகிய நாமே செய்ய வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக