லேபிள்கள்

24.6.14

ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியர்களுக்கிடையே, கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளியில், டி.சி., வாங்கி சென்று, வேறு பள்ளியில் மாணவர்கள் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில், கடந்த, 1968ல், உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ரெட்டிப்பாளையம், ராந்தம், செம்மியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, பல்வேறு பகுதிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இந்த பள்ளி, கடந்த, 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை, 150 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு, நான்கு பட்டதாரி ஆசிரியர், இரு இடைநிலை ஆசிரியர், இரு தொழிற்கல்வி ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என, பத்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இதில், நடப்பாண்டு, ப்ளஸ்2 வகுப்பில், 12 மாணவர், எட்டு மாணவி என, 20 பேர் மட்டுமே உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி.,யில், 16 மாணவர், 25 மாணவி, என, மொத்தம் 41 பேர் படித்து வருகின்றனர். நடந்து முடிந்த, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில், மொத்தம், 36 மாணவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி, 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்களும், இதே பள்ளியில் மீண்டும், ப்ளஸ்1 வகுப்பில், சேர்ந்து படிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 மாணவர்கள் டி.சி.,யை பெற்று, வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மீதி உள்ள, பத்து மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த பள்ளியில் படித்தவர்களே, ப்ளஸ்1 வகுப்பில், அதே பள்ளியில் சேராமல் வேறு பள்ளியில் சேர்வதை கண்டு, மற்ற கிராமத்தை சேர்ந்த மாணவர்களும், பெரணம்பாக்கம் பள்ளியில் சேராமல், தேவிகாபுரம், போளூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு, ப்ளஸ்1 வகுப்பில், மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை, இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு, ப்ளஸ் 2 வகுப்புக்கும், இதே நிலை தொடரும் அபாயம் உள்ளது. இதனால், இதுவரை மேல்நிலைப்பள்ளியாக இருந்த, இந்த பள்ளி வருங்காலங்களில், உயர்நிலைப்பள்ளியாக மாற வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பள்ளியில், ஆசிரியர்களுக்கிடையே கோஷ்டி பிரச்சனை ஏற்பட்டு, பள்ளி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. கல்வி துறையில், உயர் அதிகாரிகளும், கிராமப்புற பள்ளிகளில், ஆய்வு செய்ய வருவதில்லை. எனவே தான், இந்த பள்ளி நிர்வாக சீர்கேட்டால் சிக்கி தவிக்கின்றன.
மேலும், பணி விகிதாச்சாரத்தை சமன்படுத்தி, தேவையான முதுகலை ஆசிரியர்களை நியமித்து, தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை மாற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை சி.இ.ஓ., பொன்னையா கூறியதாவது: கவுன்சிலிங் மூலம் வசதியான பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் இடம்மாறி செல்வதை எங்களால் தடுக்க முடியாது. இதனால், கிராமப்புற பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. மாவட்டம் முழுவதும், எந்தெந்த கிராமப்புற பள்ளிகளில், எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்பதை கணக்கெடுத்து, மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக