லேபிள்கள்

24.6.14

முதுகலை ஆசிரியர்களுக்கு முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டதால் மறு கலந்தாய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூரில் நடைபெற்று மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வுக்கு வந்த முதுகலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பணியிடம் மறைப்பு குறித்து அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காலிப்பணியிடங்கள் இருப்பது மட்டும் தான் கலந்தாய்வில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதைக் கண்டித்து கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சி.முதல்வன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:


கலந்தாய்வில் தஞ்சாவூர், வல்லம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட முக்கிய பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுகலை ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இது தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகையால் இந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு மறு கலந்தாய்வு, மறைக்கப்பட்ட இடங்களை வெளிப்படையாக நடத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக