லேபிள்கள்

22.6.14

பணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு

கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி
கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும் மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் ஓய்வு பெறுபவர்கள் உள்ளிட்ட புதிதாக உருவாகும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகளை பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் இவ்வாறு பயிற்றுவித்தல் அல்லாத பிற பணிகளை மேற்கொள்வதற்கு நாள்தோறும் அதிக நேரம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இணை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்வித்துறை அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் விபரத்தை பட்டியலாக தயாரித்து ஜூன் 23ம் தேதிக்குள் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் கிடைத்ததும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக