லேபிள்கள்

26.6.14

பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது. இதனால், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த மே 9ம் தேதி வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி, சுஷாந்தி, 1,193 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில், முதலிடம் பிடித்தார். தர்மபுரி மாணவி, அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார். நாமக்கல் மாணவர், துளசிராஜன், சென்னை, மடிப்பாக்கம் மாணவி, நித்யா ஆகியோர், 1,191 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பிளஸ் 2 மறுகூட்டலில், சென்னை, போரூர் மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண்ணும், 1,191ஆக உயர்ந்துள்ளது. மதனந்தபுரம், செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர், தமிழில், 187, ஆங்கிலத்தில், 196, பொருளியலில், 199 மற்றும் வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய, மூன்று பாடங்களில், 200க்கு 200 பெற்றிருந்தார். தமிழில், 9 மதிப்பெண் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக, வகுப்பு ஆசிரியர் தெரிவித்ததை தொடர்ந்து, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார். இதில், 9 மதிப்பெண் கூடுதலாக கிடைத்தது. இதனால், தமிழ் பாட மதிப்பெண், 196 ஆக உயர்ந்தது. இதன்மூலம், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் பட்டியலில், நவீனாவும் சேர்ந்து உள்ளார்.


முதல்வரிடம் பரிசு:


இதனால், முதல்வரிடம் பரிசு பெறும் வாய்ப்பு, நவீனாவுக்கு கிடைத்து உள்ளது. இதுகுறித்து, மாணவியின் தாயார், தனலட்சுமி கூறுகையில், ''மாநில அளவில், மூன்றாம் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரிடம் பரிசு பெறும் மாணவர் பட்டியலில், என் மகள் பெயரையும் சேர்க்க, கல்வித் துறை மறந்துவிடக் கூடாது. நவீனா, சி.ஏ., (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) படிக்க உள்ளார்,'' என்றார். தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், ''மறு மதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவை மூலம், மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டு, மாநில அளவிலான, 'ரேங்க்' பட்டியலில், யார் இடம் பிடித்திருந்தாலும், அவர்கள், உரிய பட்டியலில், கண்டிப்பாக சேர்க்கப்படுவர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக