லேபிள்கள்

22.6.14

பி.இ., கலந்தாய்வு நாளை துவங்குகிறது அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், நாளை துவங்குகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், அண்ணா பல்கலை, முழுவீச்சில் செய்துள்ளது. விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் அதிக, 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு, நாளை, 'சீட்' ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறியியல் படிப்பில் சேர, 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்ததில், 1.68 லட்சம் பேரின், விண்ணப்பங்கள் தகுதியானவை என, அண்ணா பல்கலை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, கடந்த, 16ம் தேதி, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டது. எப்போதும், சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு, முதலில் நடக்கும். அதன்படி, விளையாட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வு, நாளை காலை, அண்ணா பல்கலையில் நடக்கிறது. விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு, அவரவர் சாதனைக்கு ஏற்ப, மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தனியாக, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நாளை, கலந்தாய்வு துவங்குகிறது. கலந்தாய்வில், மாணவர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும், அண்ணா பல்கலை, முழுவீச்சில் செய்துள்ளது. கலந்தாய்வு அறைக்குள் செல்வதற்கு முன், கல்லூரி வாரியாக காலி பணியிடங்கள் குறித்த விவரம், பெரிய திரையில், 'லைவ்'வாக ஒளிபரப்பப் படும். இதற்கென, பெரிய அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்ட, 'ஹெல்ப் டெஸ்க்' குடிநீர், கழிப்பறை வசதிகள், 'கேன்டீன்' வசதி என, அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு, 23, 24 ஆகிய தேதிகளிலும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. இதன்பின், 27ம் தேதி முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 28ம் தேதி வரை நடக்கும் கலந்தாய்விற்கு, தினமும், 5,000 மாணவர்கள் வீதம் அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும், 50 ஆயிரம் பேர் வரை, 'ஆப்சென்ட்' ஆகின்றனர். இந்த ஆண்டு, மொத்த மாணவர் எண்ணிக்கையே, 1.68 லட்சம் என்பதால், 'ஆப்சென்ட்' எண்ணிக்கையும், குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரசு ஒதுக்கீட்டில், 2 லட்சம் இடங்கள் இருப்பதால், அனைத்து மாணவர்களுக்கும், நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக