அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் பள்ளிக்கு ஆசிரியர்கள் ஒழங்காக வராததால் மாணவ–மாணவிகள் படிப்பு பாழாவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவினாசி ஒன்றியம், ராவுத்தம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 5–ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது 37 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. இங்கு தனித்தனியே இரண்டு கட்டிடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. சில நாட்களில் ஒரு கட்டிடம் பூட்டியே இருக்கும்.
கடந்த 23–ந் தேதி தலை மை ஆசிரியர் வரவில்லை. மற்றொரு ஆசிரியர் காலை 9.45 மணிக்கு வந்தார். அதுவரை பள்ளி மாணவ–மாணவிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தாமதமாக வந்த ஆசிரியரிடம் ஏன் காலதாமதமாக வந்தீர்கள் என நாங்கள் கேட்டதற்கு உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறுகிறார்.
முதலில் 50 மாணவர்கள் வந்த பள்ளியில் தற்போது வருகை குறைந்து கொண்டே போகிறது. மாணவ–மாணவிகளின் நலன் கருதி தினசரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தகவல் தெரிவித்ததும் அவினாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளிக்கு வந்து அங்கிருந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக