லேபிள்கள்

23.6.14

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை

அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள, கல்வி வளர்ச்சி குறியீட்டில், புதுச்சேரி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடங்களில் இயங்குவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. பல பள்ளிகளில், அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட அறைகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தகவல் சென்றுள்ளது.இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வல்லவன், ஆய்வு நடத்தும் அதிகாரிகளுக்கு, சுற்றறிக்கை ஒன்றை, கடந்த 16ம் தேதியன்று அனுப்பி உள்ளார்.

சுற்றறிக்கையில், 'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, முழுமையான கட்டடத்தில், அனைத்து பள்ளிகளும் இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், சில பள்ளிகள், அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட கட்டடங்களில் இயங்குவதாக, கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அஸ்பெஸ்டாஸ் ஓடு காரணமாக, மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூட வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, சுற்றறிக்கை வெளியான 10 நாட்களுக்குள், இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும், ஆய்வு நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எந்தவித அடிப்படையான வசதிகளும் இல்லாத கட்டடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும், அங்கு படிக்கின்ற மாணவ மாணவிகளின் நலன் கருதி மாற்று ஏற்பாடுகளை செய்யவும், பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக