லேபிள்கள்

26.6.14

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு

உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது. கிராமப்புற இளைஞர்களுக்கான ஆணையம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு அலுவலகம் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் 'பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உலக தடகளத் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆறாம் வகுப்பு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் வைத்து, திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெரும்பாலான மாவட்ட விளையாட்டு அலுவலகங்களுக்கும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கும் தொடர்பில்லாத நிலையே உள்ளது. திறனாய்வு போட்டி நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன், தகவலுக்காக உடற்கல்வி ஆய்வாளர்களிடம் தெரிவிக்கின்றனர். மிகக்குறுகிய நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிகளுக்குள் சுற்றறிக்கை அல்லது போன் மூலம் தகவல் தெரிவிக்க இயலாது. எனவே, ஒருசில பள்ளி மாணவர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தி, அதிலிருந்து தேர்வு செய்து சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். திறமையான, தகுதியான அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் குறித்து தெரியாததால், அருமையான வாய்ப்பை இழக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் மூலம் குறுவட்ட, மாவட்ட, மண்டல அளவிலான 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகளை நடத்துவதற்கான நிதியை தனியாக அனுப்பினால், பள்ளிக் கல்வித்துறை மூலமே இப்போட்டிகளை நடத்தி திறமையான மாணவர்களை தேர்வு செய்ய முடியும். அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக