லேபிள்கள்

24.6.14

கலந்தாய்வில் முறைகேடு: தலைமையாசிரியர்கள் அதிருப்தி

நாகை மாவட்டத்தில், நேற்று நடந்த தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில், முறைகேடு நடந்ததாகக் கூறி, கலந்தாய்வை புறக்கணித்து, தலைமையாசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், நாகை மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, 17ம் தேதி துவங்கி, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. நாகை புனித அந்தோணியார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி முன்னிலையில், நேற்று, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு துவங்கியது. இதில், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 600 பள்ளிகளில் இருந்து மாறுதல் கோரியிருந்த, 200க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை ஒன்றியத்தைச் சேர்ந்த, பள்ளிகளுக்கான கலந்தாய்வு என, அறிவிக்கப்பட்டது. இதில், வரதம்பட்டு பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கோரவில்லை. பொட்டல் வெளி பகுதி விடுபட்டுள்ளது என, கலந்தாய்வில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள், டி.இ.ஓ.,விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.இ.ஓ., நிலஒளி, கலந்தாய்வை மதியத்திற்கு ஒத்தி வைப்பதாக கூறியதால், ஆத்திரமடைந்த தலைமையாசிரியர்கள், கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். 'கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளது; எனவே, அரசு, உடன் தலையிட்டு ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, தலைமையாசியர்கள் கோஷம் போட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக